Friday, 10 August 2012

இணையத்தின் வேகத்தை அதிகரிக்க

எந்தவொரு மென்பொருளையும் பயன்படுத்தாமல், உங்களது இணையத்தின் வேகத்தினை அதிகரிக்க முடியும்.






இதற்கு முதலில்,
1. Windows XPஆக இருந்தால், XP -->கிளிக் programs--> Run.
Windows 7 ஆக இருந்தால், programs---> search box---> Type Run.
2. Run விண்டோ ஓபன் ஆனதும் gpedit.msc என டைப் செய்யவும்.
3. இப்போது வரும் புதிய விண்டோக்களில் பின்வருவதை கிளிக் செய்யவும்.
--> Computer Configuration

--> Administrative Templates

--> Network

--> QoS Packet Scheduler

--> Limit Reservable Bandwidth
4. இதில் Not Configured என்பது கிளிக் செய்யப்பட்டு இருக்கும் இதனை Enable என மாற்றி, பின்னர் BandWidth என்ற இடத்தில் 20 ஐ 0 என மாற்றம் செய்யவும்

ஆங்கிலம் தமிழை விழுங்கிவிடுமா ?


    ஓட்டப் பந்தையத்தில் நாம் முதலிடம் பெறவேண்டுமென்றால்
    நாம் ஓடவேண்டும், மற்றவர்களைவிட விரைவாக ஓடவேண்டும்!

    அதைவிட்டுவிட்டு மற்றவர்கள் மெதுவாக ஓடினால் நாம் முதலிடம் வந்துவிடலாம் என்று எண்ணுவது சரியான முடிவாகுமா?

    வளர்ந்து வரும் மொழிகளுக்கு இணையாக
    நம் மொழியையும் நாம்
    வளப்படுத்திக்கொள்ளவேண்டும்!
    சீரமைத்துக்கொள்ளவேண்டும்! என்பதே சரியான பார்வையாக இருக்கமுடியும் இதைத் தவிர்த்து பிற மொழிகளின் வளர்ச்சியைக் கண்டு கோபம் கொள்வதால் மட்டும் நம் மொழி வளர்ந்துவிடாது.


    நம் தமிழ் மொழி தொன்மையானதுதான்.
    இலக்கிய, இலக்கண வளமானதுதான் என்றாலும் இன்று, கொஞ்சம் கொஞ்சமாகப் புறம் தள்ளப்பட்டு வருவதும் உண்மைதான்.

    அடுத்த நூற்றாண்டு அழிந்துபோகும் மொழிகளில் நம் மொழியும் இடம்பெற்றிருப்பது சிந்திக்கவேண்டிய ஒன்றாகவுள்ளது.

    இந்த சூழலில்....

    நம் தமிழ் இருக்கவேண்டிய இடத்தில் ஆங்கிலம் இருக்கிறதே என்பது தான் தமிழ்ப் பற்றாளர்களின் ஆற்றாமையாகவும், கோபமாகவும் வெளிப்படுகிறது.

    தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் மட்டுமே பயிற்றுமொழியாக இருந்துவந்த ஆங்கிலம் இன்று அரசு ஆரம்பப் பள்ளிகளிலும் அடியெடுத்துவைத்திருக்கிறது.அரசின் இந்த முடிவு, தமிழகத்தில் ஆங்கிலக் கல்வியை வலிமைப்படுத்தி, தமிழ்மொழிக்கு இடமே இல்லாமல் செய்துவிடுமோஎன்பதுதான் தமிழ் ஆர்வலர்களின் பெரும் கவலையாக உள்ளது.

    இன்று உலகம் சென்றுகொண்டிருக்கும் வேகத்துக்கு நம் மக்களும் செல்லவேண்டும் என்ற ஆவலில்தான் அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது.ஆரம்பப் பள்ளிகளில் தமிழ் கற்று, அதற்கு மேல் ஆங்கிலம் கற்பதால் இன்றைய மாணவர்களில் பலரும் மொழிச்சிக்கலில் சிக்கித் தவிக்கின்றனர்.

    பிறமொழி கலவாது தமிழோ, ஆங்கிலமோ பேச இயலாதவர்களாக உள்ளனர்.

    தமிழை ஆங்கிலம் விழுங்கிக்கொண்டிருக்கிறது! என்பது நம் அச்சத்தின் வெளிப்பாடாகவே உள்ளது.

    இது மொழிப் போராட்டம்! என்றோ
    அரசின் தவறான முடிவு! என்றோ சிந்திப்பதைத் தவிர்த்து அரசே சிந்திக்கும்விதமாக தமிழ்மொழியை தகுதியுடைய மொழியாக்கிக் காட்டுவதே அறிவுபூர்வமான செயல்பாடாக இருக்கமுடியும்.


    தமிழுக்காக உயிரையும் கொடுப்பேன் என்று முழங்குபவர்களே நீங்கள் உயிரையெல்லாம் கொடுக்க வேண்டாம்..

    இயல்இசைநாடகம் என்ற முத்தமிழை அறிவியல் தமிழ் (இணையத்தமிழ்)என்று நான்காம் தமிழாக வளரவிடுங்கள்...

    உங்கள் பங்குக்கு ஒரு செங்கலாவது எடுத்துக் கொடுங்கள்.

    தமிழ் தமிழ் என்று பேசுபவர்களே.....
    உலகமே கணினிஇணையம் என்று பேசிக்கொண்டிருக்கிறது...

    இன்னும் நீங்கள் யாப்புஅணியென்று ஆய்வு செய்துகொண்டிருக்கிறீ்ர்கள் என்பதை உணருங்கள்.

    ஆங்கிலத்தை விட உங்கள் தமிழ் எவ்வாறு சிறந்தது என்பதை இணையத்தில் உலகத்துக்கே தெரியும் விதமாக எடுத்துச் சொல்லுங்கள்.
    உலகத்துக்கு உங்கள் கருத்து புரிந்துவிட்டால் உங்கள் அரசாங்கத்துக்குப் புரியாமலா போகும்?


    தொல்காப்பியர் சொல்லிய உயிர்ப்பாகுபாட்டை மனிதமரபியல் மருத்துவத்தோடு ஒப்பிட்டுச் சொல்லுங்கள்..

    தொல்காப்பியத்தின் மெய்பாட்டியலை பிராய்டின் உளவியல் கோட்பாட்டோடு தொடர்புபடுத்தி உரையுங்கள்..

    திருவள்ளுவரின் மருத்துவச் செய்திகளை மருத்துவ மாணவர்களுக்கும் புரிமாறு எடுத்துச் சொல்லுங்கள்..

    இதுதான் சரியான மொழிப்போராட்டமாக இருக்கமுடியும் என்பது எனது கருத்து.

    அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலம் கொண்டுவரப்படுவதாலேயே தமிழ் அழிந்து போய்விடாது.

    தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களிடம் தமிழ் அடிப்படை இலக்கண இலக்கிய மரபுகளைச் சொல்லிக் கொடுத்து, அதை ஒப்பிட்டு ஆங்கிலத்தைச் சொல்லிக்கொடுத்தால் அவர்கள் இருமொழியையும் இயல்பாக, எளிதாகக் கற்றுக்கொள்வார்கள்.

    அதைத் தவிர்த்து தமிழை மறைத்து (மறந்து), ஆங்கிலத்தை சொல்லித் தருவது என்பது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களிடம் கடினமான மொழிச்சிக்கலுக்கு வழிவகுப்பதாகவே அமையும்.

    சிந்திக்க மறந்த உண்மைகள்.


  1. தொல்காப்பியம், நன்னூல், தொன்னூல் விளக்கம் என காலந்தோறும் தோன்றிய இலக்கண நூல்களுக்கு இணையாக இன்றைய பேச்சுத்தமிழைக் கட்டமைக்கும் இலக்கணங்கள் உருவாக்கப்படவில்லை.


  2. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நம்மிடம் கலைச்சொற்களும் போதுமானதாக இல்லை. அதை உருவாக்க அரசாங்கம் போதுமான நடவடிக்கை எடுக்கவும் இல்லை.


  3. தமிழ்ப் பற்றாளர்கள் பலரும் கூட்டம்போட்டு பேசுதல், நூல் வெளியிடுதல் ஊடகளில் தம் எதிர்ப்பைப் பதிவு செய்தல் என்பதோடு நின்றுவிடுகிறார்கள். இணையப் பரப்புக்கு வந்து தம் கருத்தைப் பதிவு செய்ய விரும்புவதில்லை. தமிழ் தமிழ் என்று பேசுபவர்களில் எத்தனைபேர் இணையப்பரப்பில் தமிழின் சிறப்பை எடுத்துரைத்துள்ளனர்...? 
  4. தமிழில் விக்கிப்பீடியா என்று ஒன்று உள்ளது எத்தனை தமிழாசிரியர்களுக்குத் தெரியும்? 
  5. தமிழ் இணையப் பல்கலைக்கழகம் என்ற முகவரிக்கு எத்தனை தமிழ் விரிவுரையாளர்கள்  சென்றிருப்பார்கள்?

  6. அரசியல்வாதிகளும் தாம் ஆட்சிக்கு வர கையாளும் உத்திகளுள் ஒன்றாக தமிழ்! தமிழ்! என்று மேடைக்கு மேடை பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

  7. நாம் செய்யவேண்டுவன...


  8. கணினிக்கு ஏற்ப நம் தமிழ்மொழியை மறு (எழுத்து)சீரமைப்பு செய்தல்வேண்டும்.
  9. கணினியின் இயங்குதளம்(ஆப்ரேட்டிங் சிஸ்டம்) தொடங்கி, இணைய உலவி (ப்ரௌசர்) வரை தமிழ் மொழியை உள்ளீடு செய்தல்வேண்டும்.
  10. அறிவியலின் எல்லாத் துறைகளுக்கும் ஏற்ப நம் தமிழ் மொழியின் கலைச்சொற்களை நாளுக்கு நாள் உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
  11. ஆங்கிலத்துக்கு செய்முறைப் பயன்பாட்டு அறை (லேங்குவேஜ் லேப்) இருப்பது போல தமிழ் மொழிக்கு, வரிவடிவத்துக்கும், ஒலிவடிவத்துக்கும் பயிற்சி அறைகளை உருவாக்கவேண்டும்.
  12. தமிழ் மொழிக்கு தலைவாரிப் பூச்சூடியது போதும். இனி பள்ளிக்கு அனுப்புவோம்.
  13. தமிழ் மொழிக்கு நடக்க சொல்லிக்கொடுத்தது போதும். இனி பறக்கச் சொல்லிக் கொடுப்போம்.
  14. வெறும் நூல்களையும், கரும்பலகையையும் கொண்டு தாலாட்டுப் பாடி எதுகை, மோனையோடு பாடம் நடத்தம் ஆசிரியர்களுக்கு ஓய்வு தருவோம்.
  15. கணினியின் துணைகொண்டு, இணையத்தில் உலவி தமிழ் சொல்லும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை தருவோம்.


  16. இவ்வாறெல்லாம் செய்து தமிழின் தற்காலத் தேவையை உணர்ந்து சீர்செய்து இன்றைய சூழலுக்கு ஏற்ப நம் மொழியைத் தகவமைத்துக்கொள்வது நம் கடமையாகவுள்ளது.


    பெற்றோர்களே..
    அரசாங்கமே..
    கல்வியாளர்களே..
    மாணவர்களே...

    புரிந்துகொள்ளுங்கள்...

    தமிழ் - ஆங்கிலம் இரண்டும் மொழிகளே..
    இரண்டு மொழிகளும் அறிவைத் தரும் வாயில்களே..
    தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு தமிழை நல்ல அடித்தளமாக்கிவிட்டால் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் அவர்கள் கற்றுக்கொள்வார்கள். அதனைவிடுத்து ஆங்கிலம் மட்டும் போதும் என்று கருதினால் அவர்கள் அவ்வளவு எளிதில் எந்த மொழியையும் கற்றுக்கொள்ளமுடியாது.

    மொழிகள் இனத்தின் அடையாளம். அதிலும் பல்லாயிரம் ஆண்டு தொன்மையான செம்மொழியான தமிழ், தன் அடையாளத்தை இழப்பதற்கு நாம் துணையாகலாமா?

    ஆங்கிலம் தமிழை விழுங்குமா? விழுங்காதா?

    என்று சிந்திப்பதை விடுத்து..

    தமிழ் மொழியை, ஆங்கில மொழிக்கு இணையான அறிவுச் செல்வங்களைக் கொண்ட மொழியாக்க பாடுபடுவோம்.